

அரசாங்கத்துக்கும், அதற்கு ஆதரவாக நிற்கும் கட்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சவாலானதாக இருப்பது வெளிப்படை.
நடைபெறப் போகும் பொதுத்தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்கும் அதன் மூலம் தமிழ்மக்களின் பேரம் பேசும் பலத்தைச் சிதைப்பதற்கும் திரைமறைவில் சதிமுயற்சிகள் நடப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் வேலைகளில் கடசிகள் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில் அவரது இந்த அறிக்கை புறந்தள்ளப்படக் கூடியதொன்றல்ல.
அரசாங்கத்துக்கும், அதற்கு ஆதரவாக நிற்கும் கட்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சவாலானதாக இருப்பது வெளிப்படை. விடுதலைப் புலிகளை ஏக பி;ரதிநிதிகளாக முன்வைத்து கடந்த பொதுத்தேர்தலில் 22 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு- புலிகளின் தற்போதைய உறங்குநிலைக்குப் பின்னர் தமிழ்மக்களின் ஆதரவு நிலைக்காது என்றே அரசாங்கம் கருதிக் கொண்டிருந்தது.
அத்துடன் புலிகளின் பின்புலச்செயற்பாடுகளால்தான் கூட்டமைப்பால் வெற்றிபெற முடிந்தது என்றும் அரசதரப்பு குற்றம்சாட்டி வந்தது. ஆனால் இப்போது கூட்டமைப்புக்கு என்றொரு தமிழ்த் தேசியத் தளம் இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.
அது யாழ்.மாநகரசபைத் தேர்தல், வவுனியா நகரசபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றில் வெளிப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவின் மீது தமிழ்மக்கள் ஏகோபித்த ஆதரவை வெளிப்படுத்தாத போதும் அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்தனர் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தக் கட்டத்தில் அடுத்த பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு முக்கியமானதொரு கட்சியாக- எதிர்பார்ப்பு நிறைந்த ஒன்றாக மாறியிருக்கிறது.
அதனால் அரசதரப்புடன் இணைந்து கொள்ளுமாறு கூட கூட்டமைப்புக்கு அடிக்கடி அழைப்புகள் செல்கின்றன. அண்மையில் கூட அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த அழைப்பை பகிரங்கமாகவே விடுத்திருந்தார். ஆனால் கூட்டமைப்பு தமக்கு இருக்கின்ற ஆதரவுத் தளத்தை கட்டியமைப்பதிலும்- அதை சரியான வழியில் பயன்படுத்துவதிலும் எந்தளவுக்கு உறுதியுடன் இருக்கிறது என்ற கேள்வி பலரிடமும் இருக்கவே செய்கிறது. ஆனால் பொதுத்தேர்தல் கூட்டமைப்புக்கு சவால் நிறைந்த ஒன்றாக இருக்கப் போகிறது. இதற்குக் காரணம் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற உள்முரண்பாடுகளேயாகும்.
இது சரியானதொரு முடிவாக இருக்குமா என்பதை அடுத்த பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலும் அவர்களுக்குக் கிடைக்கப் போகும் வாக்குகளுமே தீர்மானிக்கப் போகின்றன. கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் வகையில் மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களில் குறைந்தது மூன்று சுயேட்சைக் குழுக்களை போட்டியில் நிறுத்தி வாக்குகளைப் பிரிப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக விநோநோகராதலிங்கம் கூறியிருந்தார். அதுபோலவே யாழ்ப்பாணத்திலும் அப்படியான முயற்சிகள் நடக்கின்றன. ஆளும்கட்சியே இதன் பின்னணியில் இருப்பதான குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன.
அதேவேளை ஆளும்கட்சி மற்றும் அதன் கூட்டு கட்சிகள் மட்டுமே கூட்டமைப்பின் வெற்றிக்கு குழி பறிப்பதாக நினைக்கக் கூடாது. கூட்டமைப்புக்குள்ளேயே அதன் பலம் சிதைவடையக் காரணமான சக்திகள் இருப்பதை எவராலும் நிராகரிக்க முடியாது. தலைமைக்குக் கட்டுப்படாதவர்கள் என்று கூறி கூட்டமைப்பில் ஒரு பகுதியினரை வெளியேற்றும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.
கூட்டமைப்பை எந்த வகையிலாவது சிதைத்துவிட வேண்டும் என்று கனவு காண்பவர்கள் ஏராளம்.
முரணான கருத்துகளை கொண்டிருப்போரை ஒவ்வொருவராகப் பிடித்து வெளியே விட்டால் அது கூட்டமைப்பாக இருக்க முடியாது. அதுபோலவே மாற்றுக் கருத்துகள் இல்லாமல் ஒரு கூட்டமைப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம். அந்தளவுக்கு ஒருமித்த கருத்து இருக்குமேயானால்- நான்கு கட்சிகளும் எப்போதோ ஒன்றாகியிருக்கும்.
கருத்து வேற்றுமைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக வெளியே துரத்தி விடுவதிலேயே குறியாக இருந்தால் பலம் பெற்ற சக்தியாக ஒருபோதும் உருவாக முடியாது.
பொதுத்தேர்தலுக்கான காலம் நெருங்கி வருகின்ற நிலையில் பேரம் பேசுகின்ற சக்தியாக உருவெடுப்பதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்ளுமா என்பதை- உள்வீட்டுப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதில் அது கடைப்பிடிக்கவுள்ள அணுகுமுறையில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.
கொழும்பிலிருந்து கபில்